இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?

பாதுகாப்பு உட்பட இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மறைத்து வைத்திருப்பது ஏன்? இந்தியாவின் அனுமதியின்றி இவற்றை பகிரங்கப்படுத்த முடியாது என அரசாங்கம்கூறுவது அதன் கையாலாத்தனத்தையே வெளிப்படுத்துகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அமெரிக்காவின் தாளத்துக்கேற்ப செயற்பட்ட ஜே.ஆர். ஜயவர்தனகூட 1988 இல் இந்தியாவுடன் கைச்சாத்திட்ப்பட்ட ஒப்பந்தத்தை வெளியிட்டார்.
ஜே.ஆரின் மருமகனான ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்டார். அந்த உடன்படிக்கைகூட பகிரங்கப்படுத்தப்பட்டது.

ஆனால் தேசிய மக்கள் சக்தியினர், இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்திய பிரதமர் இலங்கைவந்தபோது ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எதற்காக ஒப்பந்தங்கள் மறைக்கப்படுகின்றன? அவை நாட்டுக்கு பாதுகாப்பில்லை. இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் ஒப்பந்தங்கள் எனில் எதற்காக ஒளித்துவைக்கப்பட்டுள்ளன? நாட்டுக்கு பாதகம் என்பதால்தான் அவை இன்னும் பகிரங்கப்படுத்தப்படாமல் உள்ளது.” – என்றார்.

Share This