எஸ்.எம்.சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் நிராகரித்தது

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சருக்கு வெளியில் இருந்து உணவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எஸ்.எம். சந்திரசேனவின் முன்னாள் செயலாளர் ஒருவரால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கைதி ஒருவர் வெளியில் இருந்து உணவு பெற விரும்பினால், அந்தக் கோரிக்கையை கைதியின் நெருங்கிய உறவினர் ஒருவர் முன்வைக்க வேண்டும்.
எனினும், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு வெளியில் இருந்து உணவு பெறுமாறு கோரிக்கை விடுத்த முன்னாள் செயலாளர், குடும்பத்தின் நெருங்கிய உறவினர் அல்ல என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, அவரது கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நெருங்கிய உறவினர் ஒருவர் கோரிக்கை விடுத்தால் அனுமதி வழங்கப்படும் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதுவரை, முன்னாள் அமைச்சர் சிறைச்சாலையால் வழங்கப்படும் உணவைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையின் எம் வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் குழுவுடன் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்காம் திகதி லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, 18 ஆம்திகதி காவலில் வைக்கப்பட்டார்.