சிறுபோக நெல் அறுவடை – உத்தரவாத விலை வெளியானது

சிறுபோக நெல் அறுவடை – உத்தரவாத விலை வெளியானது

சிறுபோக அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அதன்படி, நாளை (03) முதல் அரசு களஞ்சியசாலைகள் அறுவடை இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் பிற குழுக்களுடன் சமீபத்தில் நடைபெற்ற கூட்டுக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறிய பிரதியமைச்சர், அதன்படி, அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வடமேல் மற்றும் தென் பிரதேசங்களில் நெல் கொள்முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது நெல் கொள்முதல் செய்வதற்கு 600 மில்லியன் ரூபாய் இருப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரு கிலோ நாட்டு நெல் ரூ.120க்கும், ஒரு கிலோ சம்பா நெல் ரூ.125க்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல் ரூ.132க்கும் அரசு களஞ்சியசாலைகளில் கொள்வனவு செய்யப்படும் என்றும், இந்த களஞ்சியசாலைகளுக்கு அனைத்து விவசாயிகளும் தரப்படுத்தப்பட்ட நெல்லை வழங்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், இந்த முறை ஈரமான நெல்லுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி, ஒரு கிலோ நாட்டு நெல் ரூ. 102, ஒரு கிலோ சம்பா நெல் ரூ. 105 மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா நெல் ரூ. 112 என விவசாயிகள் விற்பனை செய்யலாம்.

அரசு களஞ்சியசாலைகளில் ஈரமான நெல்லை பெற முடியாத நிலை இருப்பதாகவும் கூறிய பிரதியமைச்சர், விவசாயிகள் அநீதி இழைக்கப்படாமல் இருக்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

Share This