இலங்கையர்கள் மலேசியாவுக்கு விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ளும் திட்டம் பரிசீலனையில்

இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை மலேசிய சுற்றுலா அதிகாரிகள் பரிசீலித்துள்ளனர்.
மலேசிய சுற்றுலாவின் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச மேம்பாட்டு மூத்த இயக்குனர் நுவால் ஃபாதிலா கு அஸ்மி, இலங்கையர்களுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குவது குறித்து ஏற்கனவே மலேசிய அரசாங்கத்திடம் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் முறையான கோரிக்கை இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயமும் இந்த முயற்சியை தீவிரமாக ஆதரிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“நாடுகள் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க விரும்புவதால், விசா இல்லாத முயற்சிகள் உலகளவில் வேகம் பெற்று வருகின்றன. மலேசியாவும் அண்மையில் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்க ஆரம்பித்துள்ளது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,2024 ஆம் ஆண்டில் 58,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மலேசியாவிற்கு சென்றுள்ளனர். இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 122 சதவீதம் அதிகரிப்பாககும்.
2025 ஆம் ஆண்டில் 31.4 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும், 2026 ஆம் ஆண்டுக்குள் 35.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை மலேசியா நிர்ணயித்துள்ளது.