செம்மணி மனித புதைகுழியில் குழந்தைகளுக்கான காலணிகள், பொம்மைகள்

செம்மணி மனித புதைகுழியில் குழந்தைகளுக்கான காலணிகள், பொம்மைகள்
இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு போல் தோன்றும் ஒரு எலும்புக்கூடுக்கு அருகில், நீல நிறத்தில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு செருப்பு நேற்று கண்டெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள  38 எலும்புக்கூடுகளில், குறைந்தது 10, சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் அடங்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது நீதிமன்றத்தால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஏற்கனவே ஒரு பையுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு, நாள் முழுவதும் தோண்டப்பட்டு முழுமையாக மீட்கப்பட்டது,” என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.

ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 33 மனித எலும்புகளுக்கு மேலதிகமாக ஐந்து மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டாலும், எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தோன்றுவதால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது என அவர் மேலும் கூறினார்.

“முழு நாள் அகழ்வுப் பணியில் சுமார் ஐந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாது. குழப்பமாக காணப்படுகிறது.”

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் அடையாளம் காணப்பட்டு, மனித எலும்புகள் இருக்கக்கூடிய இடங்களாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணிகள், நேற்றைய தினம் (ஜூன் 1) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

1990 களில் செம்மணி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி கிளிபர்ட் பெரேரா அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு, அகழ்வாராய்ச்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் அகழ்வாராய்ச்சி தொடர்பான பழைய தகவல்களைப் பற்றி விவாதித்ததாகவும் சட்டத்தரணி ரணிதா குறிப்பிடுகின்றார்.

செம்மணிப் பகுதியில் முன்னூறு முதல் நானூறு வரையிலான புதைகுழிகள் இருப்பதாக, செப்டம்பர் 7, 1996 அன்று பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை இராணுவத்தின் நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்ற சாட்சிக்கூண்டில் இருந்தவாறு தெரிவித்திருந்தார்.

1999 ஆம் ஆண்டு அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட 15 உடல்களில், இரண்டு உடல்கள் 1996 இல் காணாமல் போன இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டன. எஞ்சிய 13 உடல்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்வாராய்ச்சிகள் மே 15 ஆம் திகதி தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பமானது.

Share This