“323 கண்டெய்னர்களின் விவரங்கள் எனக்குத் தெரியும்‘‘ – அர்ச்சுனா எம்.பி.

“323 கண்டெய்னர்களின் விவரங்கள் எனக்குத் தெரியும்‘‘ – அர்ச்சுனா எம்.பி.

சர்ச்சைக்குள்ளான 323 கண்டெய்னர்களின் விடுவிப்பு தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்துக்களால் தனது பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு பாதுபாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கூறினார்.

தொடர்ந்தும் அவர் இன்றைய அமர்வில் உரையாற்றிய அவர்,

“விவாதத்திற்குரிய 323 கண்டெய்னர்களில் என்ன உள்ளன, அவை எங்கிருந்து வந்தவை, எந்த இடத்தில் அவை இறக்குமதி செய்யப்பட்டன என்பதனை பற்றிய முழு விபரப்பட்டியலையும் வழங்க முடியும். ஆனால், அந்த விபரங்களை வெளியிட்ட பிறகு, என்னை பொய்யான வழக்குகளுக்குள் இழுத்துச் செல்லாமல், எனது எம்.பி. பதவியை பறிக்காமல், நிச்சயமாக பாதுகாக்கப்படும் என்ற உத்தியோகபூர்வ உறுதியும் எனக்கு வேண்டும்.”

“எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்படலாம். ஆனால் இப்போது எனக்கு பயமாக உள்ளது. நான் கொண்டுள்ள தகவல்களை வெளியிட்டால் என்னை ‘போதைப் பொருள்’ வைத்துள்ளார் என பொய்யாக குற்றம்சாட்டி, சட்டவழியில் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, ஏதாவது போலி வழக்கொன்று போட்டு சிறையில் அடைக்கப்படுவேனா என்ற அச்சம் இருக்கிறது.”

“அந்த விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார். இல்லாவிட்டால் நான் வேறு நாட்டிற்குப் புலம்பெயர்ந்து அந்த உண்மைகளை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். நான் உயிருக்கு பயந்தவனில்லை. ஆனால் இப்போது என்னை அடக்க மும்முரமாக திட்டமிடப்படுகின்றது. இவை எல்லாம் ஒரு உண்மையை வெளிக்கொணர தடுக்கும் முயற்சியே.”

Share This