செம்மணிப் புதைகுழியில் ‘யுனிசெவ்’ புத்தகப் பை மீட்பு

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின்போது மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, கண்ணாடி வளையல் மற்றும் ‘யுனிசெவ்’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் புத்தகப் பை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட
அழ்வுப் பணிகளின் நான்காம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்த மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தமாக 33 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வின்போது மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் உள்ள என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, கண்ணாடி வளையல் மற்றும் ‘யுனிசெவ்’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் புத்தகப் பை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளுக்கு அருகில் எதுவித ஆடைகளும், பொருட்களும் மீட்கப்படாத நிலையில் இன்றைய அகழ்வின்போது என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, கண்ணாடி வளையல் மற்றும் ‘யுனிசெவ்’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் புத்தகப் பை என்பன அடையாளம் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நீல நிறப் புத்தகப் பை முன்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ‘யுனிசெவ்’ தொண்டு நிறுவனத்தால் நிவாரணமாகப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மனிதப் புதைகுழி அமைந்திருக்கும் இடத்தில் மண் மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காக சட்ட வைத்திய அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதன்பிரகாரம் மண் மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காக இன்று கொழும்பில் இருந்து ஒரு குழு வருகை தந்து மண் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும், செய்மதிப் படங்கள் மூலம் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சில இடங்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களும் நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்று துப்பரவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நயாழ் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.