கச்சா எண்ணெய் விலை உயர்வு… இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல் உலகளாவிய எண்ணெய் விலைகளில் உயர்வுக்கு வழிவகுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3.3 வீதம் உயர்ந்து 79.60 டொலராக பதிவாகியுள்ளது. அமெரிக்க கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3.18 வீதம் உயர்ந்து 76.19 டொலராக பதிவாகியுள்ளது.
ஈரான் ஒரு முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடு என்பதுடன் ஹார்முஸ் நீரிணை அந்நாட்டிலேயே அமைந்துள்ளது. இந்த நீரிணை வழியாக உலகின் பெரும்பாலான கச்சா எண்ணெய் கொண்டுச் செல்லப்படுகின்றது.
ஒபெக் (OPEC) அறிக்கையின்படி, மே மாதத்தில் ஈரான் ஒரு நாளைக்கு சுமார் 3.3 மில்லியன் பீப்பாய்களை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்துள்ளதாகவும், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஹார்முஸ் நீரிணையை மூட முயற்சிப்பதற்கு எதிராக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளார்.
இஸ்லாமிய குடியரசின் ஏற்றுமதிகள் இந்த நீர்வழி வழியாகச் செல்வதால், இது “பொருளாதார தற்கொலை” என்று ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானுடன் தொடர்புடைய போராளிகள் செப்டம்பர் 2019 இல் சவுதி அரம்கோவின் அப்கைக் ஆலையைத் தாக்கினர். சவுதி அரம்கோவின் அப்கைக் ஆலை உலகின் மிகப்பெரிய கச்சா பதப்படுத்தும் ஆலையாகும்.
இது ஒரு நாளைக்கு சுமார் 7 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை பதப்படுத்துகிறது. இந்த சம்பவம் உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் ஐந்து வீத தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரே நாளில் கிட்டத்தட்ட 20 வீதம் உயர்ந்தது, இது வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் விலை உயர்வைக் குறிக்கிறது.
இந்நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவை ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கு இறுதி முடிவை எடுத்தால், இலங்கையில் எண்ணெய் விலை உயர்வை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே உயர்ந்து வரும் நிலையில், எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.