ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவல் – ஜனாதிபதிக்கு நா.வேதநாயகன் வாழ்த்து

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவல் – ஜனாதிபதிக்கு நா.வேதநாயகன் வாழ்த்து

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவலாக்கப்பட்டமை எமது மாகாண மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இது முக்கியமான மைல்கல். இதற்காக எமது மாகாண மக்கள் சார்பில் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்கு விரிவாக்கும் நிகழ்சித் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (21.06.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீர்வள மேம்பாடு அமைச்சர் இ.சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கிளிநொhச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் வரவேற்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும், ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளருமான சி.ரொஷான் தெளிவுபடுத்தினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், நான் பிரதேச செயலராக பணியாற்றிய போர்க்காலத்தில் – 1991ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் – மக்கள் மருத்துவத் தேவைக்காக கொழும்புக்கு அலையவேண்டும். அதுவும் இதற்கு விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருக்கவேண்டும். இந்த அலைச்சல் வீண் செலவுகள் எல்லாம் இப்போது இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது. இது எமது மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

அரச சேவை என்பது மக்களுக்கு விரைவாக கிடைக்கப்பெறவேண்டியது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக அது மக்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. மக்கள் தமது பிரதேச செயலகங்கள் ஊடாக விரைவாக தமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும். தனித்து மருத்துவ தேவைக்காக மாத்திரமல்லாது, ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் வடக்கு மாகாண மக்கள் இன்றிலிருந்து பிரதேச செயலகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடியதாக அரச சேவையை மாற்றியமைக்கவேண்டும் என அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார். அது உண்மை. இன்று மக்கள் மத்தியில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. இன்று ஆரம்பிக்கப்படும் இந்தச் சேவைகள் ஊடாக அதை மாற்றியமைப்பதற்கு அரச அதிகாரிகள் முன்வரவேண்டும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் அமைச்சர் இ.சந்திரசேகரன், பல விடயங்கள் கடந்த காலங்களில் கொழும்பை மையப்படுத்தியிருந்த நிலையில் அதை மாகாணத்தை நோக்கி பரவலாக்கியிருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார். அதன் ஓர் அங்கமாக ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைக் குறிப்பிட முடியும் என்றார் அமைச்சர்.

இதனைத்தொடந்து ஜனாதிபதி நிதியத்தின}டாக வழங்கப்படும் புலமைப்பரிசில் மற்றும் வேறு சேவைகளை இணைய வழிமுறையூடாக செயற்படுத்தும் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், ஜனாதிபதி நிதியத்தின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )