கலைந்த கனவு; இதயத்தை உலுக்கும் இறுதிப்படம்

கலைந்த கனவு; இதயத்தை உலுக்கும் இறுதிப்படம்

அகமதாபாத்திலிருந்து நேற்று ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பிரத்திக் ஜோ‌ஷி குடும்பம் இறுதியாக விமானத்தில் இருந்து எடுத்து அனுப்பி வைத்த செல்பி படம் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்து விமானத்தில் பயணம் செய்தவர்களின் நம்பிக்கையைப் பறித்து, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ஒன்று பிரத்திக் ஜோஷியின் குடும்ப மரணம்.

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்தவர் பிரத்திக் ஜோஷி. மனைவி, குழந்தைகளைப் பிரிந்து கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், புதிய வாழ்க்கையைத் தொடங்க, குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற, மனைவியின் ஆசையை நிறைவேற்ற மூன்று குழந்தைகளையும் மனைவியையும் லண்டனுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அதற்காக மருத்துவரான அவரின் மனைவி கோமி வியாஸ் தன் பணியிலிருந்து இரு நாள்களுக்கு முன்புதான் விலகியிருக்கிறார். எனவே, பெருங்கனவுடன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறி அமர்ந்திருக்கிறது குடும்பம். துரதிஷ்டவசமாக நடந்த இந்த விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களின் இழப்பு குறித்து அவர்கள் வசித்த பகுதியைச் சேர்ந்தவர்கள், “இருவரும் லட்சியவாதிகள், கடின உழைப்பாளிகள். நன்கு படித்தவர்கள். குழந்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்,” என்று சோகத்துடன் கூறினர்.

Share This