Thala For a Reason: ‘Hall of Fame’ பட்டியலில் தோனி

Thala For a Reason: ‘Hall of Fame’ பட்டியலில் தோனி

தோனியை தங்களின் ‘Hall of Fame’ வீரர்களின் பட்டியலில் இணைத்திருக்கிறது ICC. தோனி ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஜாம்பவான் வீரர்களாக ICC கௌரவிக்கும் இந்த விடயத்துக்கு தோனி முழுக்க முழுக்க தகுதியானவர்.

2004-05 காலக்கட்டத்தில் இந்திய அணிக்குள் நுழையும் தோனிக்கு 2007 களில் இந்திய அணியின் தலைவர் பதவி கிடைத்துவிடுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரைக்கும் தோனியின் அனுபவத்தை மனதில் வைத்து பார்க்கையில், தலைவர் பதவி என்பது மிக விரைவாக கிடைத்த பதவியாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணி அப்போது எப்படியொரு சிக்கலில் இருந்தது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

கங்குலி இந்திய அணியை உச்சத்தில் தூக்கி அமர்த்தினார். 2003 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரை இந்தியா தகுதிப்பெற்றிருந்தது. சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது. இளம் வீரர்களை அறிமுகப்படுத்தி, அணிக்குள் புது ஆக்ரோஷத்தை புகுத்தியிருந்தார்.

கங்குலிக்குப் பிறகு இதெல்லாமே அப்படியே கையைவிட்டுப் போனது. பயிற்சியாளர் க்ரேக் சேப்பலின் கீழ் இந்திய அணியே சில கூறுகளாக உடைபடும் நிலைக்கு சென்றது. 2007 உலகக்கோப்பையில் மிக மோசமான தோல்வி. தோல்வி என்பதைக் கடந்து, இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு உரிய மரியாதையும் மதிப்புமே கேள்விக்குறியாக்கப்பட்டது. லோக்கல் சேனல் வரைக்கும் இந்திய அணியை ஸ்க்ரிப்ட் ஆக்கி காமெடி செய்து கொண்டிருந்தனர்.

BCCI மீது பெரிய அழுத்தம். அப்போதுதான், நாங்கள் இந்த சிஸ்டமை க்ளியர் செய்கிறோம். அனுபவ வீரர்களை விட இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து, அணியை புதிய பாதையில் எடுத்து செல்கிறோம் பாருங்கள் என்கிற மனநிலையில்தான் தோனியின் பெயரை டிக் செய்கிறார்கள் BCCI. தோனி இந்திய அணியின் தலைவர் ஆகிறார்.

2007 T20 உலகக்கோப்பைக்கு தோனி தலைமையிலான இந்திய அணி தென்னாபிரிக்கா செல்கிறது. சீனியர் வீரர்கள் பலரும் ஒதுங்கிக் கொண்டனர். இளம் அணியை தோனி வழிநடத்துகிறார். அந்த அணிக்கு ஒரு தலைமைப் பயிற்சியாளர் கூட கிடையாது. ஆனாலும் இந்திய அணி அந்தத் தொடரை மிகச்சிறப்பாக ஆடி வென்றது. தோனியும் ஒரு தலைவராக மிளிர்ந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் போட்டி டை ஆகி Bowled Out முறைக்கு சென்றிருக்கும்.

பாகிஸ்தான் வீரர்களால் பந்தால் குறிவைத்து போல்டை தகர்த்திருக்கவே முடியாது. ஆனால், இந்திய அணியில் சேவாக்கெல்லாம் வீசி ஸ்டம்புகளை சிதறடிப்பார். காரணம், இந்திய அணியை ‘Bowled Out’ முறைக்கும் தோனி தயாராக இருக்க சொல்லியிருந்தார். T20 யே அப்போது புதிது. ஒரு T20 போட்டியை எப்படி அணுக வேண்டும் என்பதே அணிகளுக்கு பெரும் குழப்பமாக இருந்தது. அப்படியிருக்க தோனி போட்டி டை ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்திருக்கிறார். அதேமாதிரி, இறுதிப்போட்டியில் ஹர்பஜனுக்கு பதில் ஜோகிந்தர் சர்மாவுக்கு கடைசி ஓவரை கொடுத்த முடிவும் இன்றளவும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அப்போதைய அவுஸ்திரேலியாவை நாக் அவுட் போட்டிகளில் வீழ்த்துவது இமாலயச் சவால். ஆனால், 2007 T20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கும். அதேமாதிரி, 2011 உலகக்கோப்பையில் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கும். அவுஸ்திரேலியா வீழ்த்த முடியாத அணி இல்லை என்கிற நம்பிக்கையையும் தோனிதான் கொடுத்தார்.

2008 இல் காமன்வெல்த் பேங்க் சீரிஸில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டு இந்திய வீரர்கள் யாரும் துள்ளிக் குதித்து கொண்டாடக் கூடாது என தோனி கூறிவிடுவார். இந்திய வீரர்கள் எந்த சலனமும் இல்லாமல் வெகு இயல்பாக அவுஸ்திரேலிய வீரர்களுக்கு கை கொடுத்து பெவிலியனுக்கு திரும்பியிருப்பார்கள். அவுஸ்திரேலியாவை வீழ்த்துவதெல்லாம் பெரிய விடயமில்லை. அவர்களொன்றும் வீழ்த்த முடியாத அணியெல்லாம் இல்லை. அது எப்போதோ நடக்கும் விடயம் போல நாம் கொண்டாடவும் தேவை இல்லை என்பதுதான் தோனி இந்திய அணிக்கு உணர்த்திய மெசேஜ்.

தோனியை பற்றி யோசிக்கையில் இன்னமும் ஆச்சர்யமாக இருப்பது அந்த 2013 சாம்பியன்ஸ் டிராபிதான். 2011 இல் இந்திய அணி ODI உலகக்கோப்பையை வெல்கிறது. அடுத்த ஒன்றரையிலிருந்து இரண்டாண்டுக்குள் அந்த 2011 இந்திய அணியிலிருந்த பெரும்பாலான வீரர்களை அணியை விட்டே வெளியேற்றிவிட்டார். 2013 சாம்பியன்ஸ் டிராபிக்கு முழுக்க முழுக்க இளம் அணியோடு சென்றார். ஏறக்குறைய 2007 டி20 உலகக்கோப்பைக்கு எப்படியொரு அணியோடு சென்றாரோ அதே மாதிரியான அணி. வெற்றியும் அதேமாதிரியானதாக இருந்தது.

2011 உலகக்கோப்பைக்கு பிறகு தோனி சீனியர்களை அணியிலிருந்து வெளியேற்றிய சம்பவம் பெருத்த விமர்சனங்களையும் சந்தித்தது. ஆனால், தோனி எடுத்த அந்த முடிவுதான். அடுத்த 10-15 ஆண்டுகளுக்கான வலுவான இந்திய அணியை கட்டமைக்க காரணமாக இருந்தது. ஒரு தலைவராக பலரும் செய்யாத காரியத்தை தோனி செய்தார். தனக்கும் பிறகுமான ஒரு அணியை அவர் கட்டமைத்துக் கொடுத்தார்.

தோனி இந்திய அணியிலிருந்து ஒதுங்கும் போது கோலியின் கீழ் எந்த அணிக்கும் சவாலளிக்கக்கூடிய அணியாகவே இருந்தது. அதாவது, தோனியின் கையில் இந்திய அணி வரும்போது அது பெரும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. தோனி அங்கிருந்து இந்திய அணியை கட்டியெழுப்பினார். ஆனால், தோனி அணியை விட்டுச் செல்கையில் அந்த அணி ஒரு உயர்மட்ட நிலையில் இருந்தது. தோனியை ஆகச்சிறந்த தலைவராக, ஆகச்சிறந்த வீரராக, ICC இன் Hall of Fame இல் வைத்து கொண்டாட இதை விட வேறெந்த காரணமும் தேவையில்லை.

Share This