அண்ணா பல்கலைக்கழக மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கான தண்டனை அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு 30 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அந்த தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஞானசேகரன் என்ற நபர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் முறைப்பாட்டைத் தொடர்ந்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றில் மார்ச் மாதம் முதல் விசாரணை ஆரம்பமானது. பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது.
இதற்கமைய, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் குறித்த நபர் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு அளித்தார்.
குற்றவாளிக்கான தண்டனை விவரம் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இதனிடையே, ஞானசேகரன் தொடர் குற்றவாளி, அவருக்கு கருணை காட்ட கூடாது என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அம்மாவையும் சகோதரியையும் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.