குஜராத்தை எலிமினேட் செய்த மும்பை இந்தியன்ஸ்: சாய் சுதர்சனின் ஆட்டம் வீண்!

நடப்பு ஐபிஎல் சீசனின் நேற்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.
முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா, பேட்டிங் தேர்வு செய்தார்.
அந்த அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மாற்று வீரராக இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் விளையாடிய பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ஓட்டங்கள் விளாசினார். தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ், 20 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் jலைவரான ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 81 ஓட்டங்கள் எடுத்தார். 9 ஃபோர்கள், 4 சிக்ஸர்களை அவர் விளாசினார். திலக் வர்மா, 11 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார். மும்பை அணியின் டாப் 4 துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். தலைவர் ஹர்திக் பாண்டியா, 9 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார்.
20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ஓட்டங்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
229 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் அணி. முதலில் இறங்கிய சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 80 ஓட்டங்கள் விளாசினார். மறுமுனையில் ஆடிய ஷுப்மன் கில் 1 ஓட்டத்துடன், நடையை கட்டினார். குஷல் மெண்டிஸ் 20 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அடுத்து இறங்கிய வாஷிங்டன் சுந்தர் சாய் சுதர்ஷனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 24 பந்துகளில் 48 ஓட்டங்கள் அவர் எடுத்திருந்தார்.
ருதர்ஃபோர்ட் 24, டிவாடியா 16, ஷாருக் கான் 13 என 20 ஓவர் முடிவில் 208 ஓட்டங்கள் எடுத்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது குஜராத் அணி. இதன் மூலம் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உடன் மும்பை அணி விளையாடும். அதில் வெற்றி பெறுகின்ற அணி ஆர்சிபி அணியுடன் ஜூன் 3-ம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.