கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் ’தக் லைஃப்’ ரிலீஸ் ஆகாது: கர்நாடக திரைப்பட சம்மேளனம் எச்சரிக்கை

கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் ’தக் லைஃப்’ ரிலீஸ் ஆகாது: கர்நாடக திரைப்பட சம்மேளனம் எச்சரிக்கை

கன்னட மொழி குறித்த தனது பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக நடந்த ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு கூறியது: “பல கன்னட அமைப்புகள் கமல்ஹாசனின் படத்தை தடை செய்யக் கோரிக்கை வைத்துள்ளன. எனவே, நாங்கள் அவர்களை சந்தித்து இந்த விஷயத்தைப் பற்றி ஆலோசித்தோம். மேலும் கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். அவர் செய்தது தவறு என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் அவரைச் சந்தித்துப் பேசவும் முயற்சிக்கிறோம்.

கமல்ஹாசன் மீது எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை. இன்று அல்லது நாளை அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கன்னட அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து, கடுமையாகப் போராடுவோம். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் எந்தச் சூழ்நிலையிலும் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ”கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட ரக்‌ஷன வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த ‘தக் லைஃப்’ படத்தின் விளம்பர பதாகைகளை கிழித்து எறிந்தனர். சமூக வலைதளங்களில் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும், கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க‌க் கூடாது எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )