இஸ்ரேலின் கொடூரம் – காசாவில் பெண் வைத்தியரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்

காசாவில் பாலஸ்தீன பெண் வைத்தியர் ஒருவரின் ஒன்பது குழந்தைகளை இஸ்ரேலியப் படைகள் கொலைசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாசர் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் அலா அல்-நஜ்ஜாரின் குழந்தைகளே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான் யூனிஸில் உள்ள வைத்தியரின் வீட்டை இஸ்ரேல் படையினர் தாக்கியுள்ளனர். தாக்குதல் நடந்த நேரத்தில் தை்தியர் மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார்.
இந்த தாக்குதலில் வைத்தியரின் கணவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களின் மீதமுள்ள மகன் ஆபத்தான நிலையில் உள்ளார்.
ஏழு மாதங்கள் முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் கொல்லப்பட்டதாக காசா ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 11 வயது மகன் மட்டுமே உயிர் தப்பியதாகவும் அவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், காசாவில் இனப்படுகொலையின் புதிய முகம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீனத்திற்கான சிறப்புத் தூதர் பிரான்செஸ்கா அல்பானீஸ் தெரிவித்தார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் சுமார் 16,500 குழந்தைகளைக் கொன்றது. மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.
முந்தைய நாள் இஸ்ரேல் 119 உதவி லொரிகளை அனுமதித்திருந்தது. இருப்பினும், இந்த லொரிகளைப் பாதுகாத்த ஆறு பாலஸ்தீன பாதுகாப்புப் பணியாளர்களை இஸ்ரேல் கொன்றது.
ஒரு நாளைக்கு 600 லொரிகள் தேவைப்பட்ட போதிலும், இஸ்ரேல் 119 லொரிகள் உதவிப் பொருட்களை மட்டுமே வர அனுமதித்தது. சமீபத்திய நாட்களில் 29 குழந்தைகள் பட்டினியால் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.