தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவு – வெறிச்சோடி காணப்படும் பஹல்காம் சுற்றுலா தலங்கள்

தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவு – வெறிச்சோடி காணப்படும் பஹல்காம் சுற்றுலா தலங்கள்

பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு மாதம் ஆகியும், பஹல்காம் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.

பீட்டாப் பள்ளத்தாக்கு முதல் பாபி ஹட் வரை பஹல்காமில் 10-க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஒரு மாதம் முன்பு வரை இந்த சுற்றுலாத் தலங்கள் பரபரப்பாகக் காணப்பட்டன. ஏப்ரல் 22-ம் திகதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்த சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்த பயங்கரவாத தாக்குதல் சுற்றுலாத் துறைக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது. சுற்றுலாவை வாழ்வாதாரமாக நம்பியிருந்த தங்களுக்கு இது பேரழிவை ஏற்படுத்திவிட்டது என்கின்றனர் ஹோட்டல் உரிமையாளர்கள். பஹல்காமில் உள்ள 1,500 க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களின் விகிதம் வெறும் 10% ஆகக் குறைந்துவிட்டதாக பஹல்காம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாவேத் புர்சா தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

“பஹல்காமில் ஏராளமான பெரிய ஹோட்டல்கள் வாடிக்கையாளர்கள் இன்றி உள்ளன. எனவே, சுற்றுலாப் பயணிகள் திரும்பி வரும் வரை வீட்டிலேயே இருக்குமாறு பல ஹோட்டல்கள் தங்கள் ஊழியர்களை கேட்டுக் கொண்டன. இது (பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்) ஒரு கொடூரமான மற்றும் பயங்கரமான சம்பவம். சுற்றுலா வாய்ப்புகள் தற்போது வரை இருண்டதாகவே உள்ளன.” என்று ஜாவேத் புர்சா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதலை அடுத்து பஹல்காமில் மூடப்பட்டுள்ள பொது பூங்காக்களை அரசு திறக்க வேண்டும் என்றும் பெரும்பாலான ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பஹல்காம் பள்ளத்தாக்கின் உயரமான சிகரங்களால் சூழப்பட்ட போஷ்வான் பூங்கா, நேரு பூங்கா, தீவு பூங்கா பஹல்காம், லிடர் வியூ பூங்கா மற்றும் அரு பூங்கா போன்ற பொது பூங்காக்கள் பல நாட்களாக மூடப்பட்டுள்ளன.

“பஹல்காமில் உள்ள பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் திரும்பி வருவதற்காக அவை திறக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஜாவேத் புர்சா தெரிவித்துள்ளார்.

‘அமர்நாத் யாத்திரை மீது நம்பிக்கை’ – ஜம்மு காஷ்மீரில் மீண்டும் சுற்றுலாத்துறை வளர்ச்சி காண, ஜூலை 3 ஆம் திகதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். “யாத்திரையை நாங்கள் நடத்துவோம். யாத்திரையைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஹோட்டல்கள் ஏற்கனவே 50% வரை கட்டண தள்ளுபடியை வழங்கி வருகின்றன. நாங்கள் சுற்றுலாப் பயணிகளை அணுகி வருகிறோம். நிலைமை மாறும்.” என்று ஜாவேத் புர்சா கூறியுள்ளார்.

ஜோர்பிங் மற்றும் ஜிப்லைன் போன்ற சாகச விளையாட்டுகளில் முதலீடு செய்த இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். “சாகச விளையாட்டுகளைத் தொடங்க நான் வங்கியில் இருந்து கடன் வாங்க வேண்டியிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்தது. இந்த ஆண்டு நல்ல லாபத்தை எதிர்பார்த்தோம். எனது வாழ்வாதாரம் சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்துள்ளது.” என்று உள்ளூர்வாசி நசீர் மிர் கூறினார்.

பஹல்காமில் விவசாய நிலங்களோ, பழத்தோட்டங்களோ கிடையாது. இந்த நகரில் உள்ள சுமார் 9,264 மக்கள் சுற்றுலாவையே நம்பி இருக்கிறார்கள். பல இளைஞர்கள் குழுவாக சேர்ந்து ஹோட்டல்களை குத்தகைக்கு எடுத்துள்ளனர். “மே முதல் ஜூன் வரையிலான முக்கிய சுற்றுலா சீசன் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த ஆண்டு ஹோட்டலுக்கான குத்தகைக்காக செலுத்திய பணத்தை கூட எங்களால் சம்பாதிக்க முடியவில்லை. பல முதலீட்டாளர்கள் மனச்சோர்வில் மூழ்கியுள்ளனர். அரசாங்கம் சுறுசுறுப்பாக செயல்பட்டு சுற்றுலாவை மீட்டெடுக்க உதவ வேண்டும்” என்று மற்றொரு உள்ளூர்வாசியான ஃபிர்தௌஸ் தார் கூறினார்.

பஹல்காமின் மயக்கும் அழகு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் நம்புகின்றனர். “பஹல்காம் சுத்தமாகவும், சுற்றுலாப் பயணிகளை மீண்டும் வரவேற்கத் தயாராகவும் உள்ளது. எந்தவொரு சம்பவமும் மக்கள், காஷ்மீருக்குச் செல்வதைத் தடுக்காது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்று ஜாவேத் புர்சா தெரிவித்துள்ளார்.

Share This