இந்தியா- பாகிஸ்தான் சண்டையில் பெண்களும் குழந்தைகளும் தான் கொல்லப்படுகிறார்கள் – மெகபூபா முப்தி

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, நேற்று இரவு முழுவதும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அவற்றை இந்திய இராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்ந்து வரும் சூழலில் இந்தியாவின் வட மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு விமான நிலையம் மீது நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் எல்லையோர பகுதிகளில் உள்ள மக்கள் பதுங்கு குழிகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சூழ்நிலை காரணமாக, எல்லையில் உள்ள மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வீடற்றவர்களாக மாறி வருவதாகவும், அவர்கள் அச்சத்தில் இருப்பதாகவும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.
இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடித்து, இந்த நிலைமையை தணிக்க வேண்டும். இரு தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் கொல்லப்படுகிறார்கள். பிரச்சினையை தீர்க்க இராணுவத் தலையீடு அல்ல, அரசியல் தலையீடு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.