இந்தியா – பாக். விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்: அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். அண்மையில் அவர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை அடுத்து அவர் இப்படி சொல்லியுள்ளார்.
“போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என நம்மால் அவர்களிடம் சொல்ல மட்டுமே முடியும். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தில் நாம் தலையிட போவதில்லை. அது நம் பணியும் அல்ல. இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசம் உள்ள ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அமெரிக்கா சொல்ல முடியாது.
இந்த மோதல் பிராந்திய ரீதியிலான போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறக்கூடாது என்பது நம் எதிர்பார்ப்பு. அப்படி நடந்தால் பேரழிவு ஏற்படும். இது அந்த நாடுகளின் தலைவர்கள் வசம் உள்ளது” என வான்ஸ் கூறியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியாவின் லடாக், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள இந்திய விமானப் படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீரென ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.
காஷ்மீரின் ஜம்மு விமானப்படைத் தளம், பஞ்சாபின் பதான்கோட் விமானப்படைத் தளம், ராஜஸ்தானில் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானத் படைத் தளங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இதில் பெரும்பாலான ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. மேலும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் நேற்றிரவு பீரங்கி மூலம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தாக்குதல் கொடுத்தது.
இந்த சூழலில் இந்திய இராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் விடிய விடிய நீடித்தது குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் கோட்லி உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இந்த பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் இராணுவ தளங்கள், விமானப் படை தளங்களில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.