ஆபரேஷன் சிந்தூர்: இந்திய இராணுவத்துக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் தெலங்கானா முதல்வர்

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய இராணுவத்துக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் தெலங்கானா முதல்வர்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய இராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக இரவிலும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவளிக்கும் வகையில் தனது ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முதலில் ஒரு இந்தியனாக, பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஆயுதப் படைகளின் முயற்சிகளுக்காக தேசிய பாதுகாப்பு நிதிக்கு என்னுடைய பணிவான பங்களிப்பாக ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதே போல காங்கிரஸ் தொண்டர்கள், எம்எல்ஏக்கள், குடிமக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share This