எல்லைகள் மூடப்பட்டன, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தயார் – இந்திய-பாக் எல்லை பகுதியில் கடும் பதற்றம்

எல்லைகள் மூடப்பட்டன, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தயார் – இந்திய-பாக் எல்லை பகுதியில் கடும் பதற்றம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய பதிலடியைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரைத் தவிர, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இரு மாநிலங்களிலும் விடுப்பில் சென்ற அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. எல்லை மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானுடன் 1,037 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தானில் உள்ள எல்லைப் பகுதி, முழுமையாக எல்லைப் பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டில் உள்ளது.

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் யாரைப் பார்த்தாலும் அவர்களைச் சுட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜோத்பூர், கிஷாங்காட் மற்றும் பிகானீர் விமான நிலையங்கள் மூடப்பட்டன. மேற்குப் பகுதி விமானப்படை போர் விமானங்களால் கண்காணிக்கப்படுகிறது. ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள கங்காநகர் முதல் ரான் ஆஃப் கட்ச் வரையிலான பகுதியில் சுகோய் ஜெட் விமானங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. பிகானீர், ஸ்ரீ கங்காநகர், ஜெய்சால்மர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரை தவிர, ரயில்வே ஊழியர்களின் விடுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் நேரங்களில் எல்லை கிராமங்களை காலி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

அவசரகால சூழ்நிலைகளுக்கு வைத்தியசாலைகள் தயாராக இருக்க அறிவுறுத்தல்கள் உள்ளன. ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூரில் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை மின் தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் வீடுகளிலும் பிற இடங்களிலும் விளக்குகளை அணைக்க வேண்டும். எதிரி விமானங்களுக்கு இலக்காக மாறுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகளையும் ரத்து செய்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதன்கிழமை காலை ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் அழித்துவிட்டன.

ஆபரேஷன் சிந்தூர் என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட 25 நிமிடப் பணியில் 24 ஏவுகணைகளை வீசி பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இந்த கூட்டு நடவடிக்கை மூலம் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி முகாம்களை அழிக்க முடிந்ததாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.

 

 

Share This