ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை – மக்கள் பக்கமே காங்கிரஸ் நிற்கிறது ; ஜீவன் தொண்டமான்

“ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் பின்னர் நாம் ஓடி ஒளியவில்லை. மக்களுக்காக எமது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. அன்று, இன்றும், என்றும் காங்கிரஸ் மக்கள் பக்கமே நிற்கும்.”
இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையக மக்களின் பிரச்சினைகளை இந்திய பிரதமரிடம் எடுத்துக்கூற, அரச தரப்பில் உள்ள மலையக அமைச்சர்களுக்கு தகுதி இல்லை எனவும் அவர் கூறினார்.
பொகவந்தலாவ நகரப்பகுதியில் நேற்று நடைபெற்ற மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,
” இந்திய பிரதமர் அண்மையில் இலங்கை வந்திருந்தபோது மலைய மக்கள் தொடர்பாக ஒன்றும் பேசப்படவில்லை. அது இந்திய பிரதமரின் தவறு கிடையாது.
சிலர், கட்சியொன்றுக்கு கொடிபிடித்துக்கொண்டு இருந்ததை அவதானித்தோம். அவர்கள் இன்று ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளனர். குரங்கு கையில் பூ மாலை கொடுத்ததுபோல அவர்களின் செயற்பாடு உள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நான் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தேன். ஆனால் ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என தோழர் அறிவித்தார். ஆனால் அது இன்னும் நடக்கவில்லை. அதற்குரிய முயற்சியை முன்னெடுத்தால் நாம் ஆதரவு வழங்குவோம்.
மலையகத்தை பொறுத்தவரையில் சுயமரியாதைக்கான போராட்டம் அவசியம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்று பல்வேறு துறையில் சாதித்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். அதேபோல நாட்கூலி முறைமை ஒழிக்கப்பட வேண்டும். அதுவே நிரந்தர தீர்வாக அமையும்.
தொழிற்சங்க பிரச்சினை, சம்பள பிரச்சினை ஆகியவற்றுக்கு நாங்கள் தான் குரல் கொடுக்கின்றோம். அடாவடி தனத்தை காட்டினால் எங்களுக்கும் அடாவடி தனத்தை காட்ட முடியும். மலையகத்தில் உள்ள ஏனைய கட்சிகளை நாம் வெறுக்கவேண்டிய அவசியமில்லை.” – என்றார்.