நல்லை ஆதீன முதல்வர் இறையடி சேர்ந்தார் – சைவ மக்கள் மத்தியில் விசனம்

நல்லை ஆதீன முதல்வர் இறையடி சேர்ந்தார் – சைவ மக்கள் மத்தியில் விசனம்

இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் இறுதி கிரியை நிகழ்வுகளை அவசர அவசரமாக இன்று நடத்த முயல்கின்றமை சைவ மக்களிடம் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வர் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் இறையடி சேர்ந்தார். இது சைவ மக்களிடம் ஆழ்ந்த கவலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரின் புகழுடலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து அவசர கதியில் இன்று மாலையே இறுதி கிரியைகள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ஈழத்தில் அரை நூற்றாண்டு காலம் சைவ சமயத்தின் தலைமகனாக விளங்கி தம் வாழ்வை இளமையிலிருந்து சைவத்திற்கு அர்ப்பணித்த ஆதீன சுவாமிகளின் புகழுடலுக்கு சைவர்கள் பலரும் பல இடங்களில் இருந்து வந்து இறுதி வணக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு சந்தர்ப்பமளிக்காது அவசர அவசரமாக, புகழுடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுவதே சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

தமக்கு ஏதும் நேர்ந்தால் தம்மைச் சமாதி வைக்க வேண்டாம் என்றும், கால தாமதமின்றிச் செம்மணி மயானத்தில் தம் பூதவுடலை சைவ முறைப்படி நீறாக்கும்படியும் கலாநிதி ஆறு. திருமுருகன் மற்றும் ரிஷி தொண்டு நாதன்சுவாமிகள் போன்றோருக்கு எழுத்தில்
முற்கூட்டியே நல்லை ஆதீன குரு முதல்வர் அறிவுறுத்தி இருந்தார என ஒரு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனபோதும் அதன் உண்மைத்தன்மைகள் தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேவேளை நல்லை ஆதீனகர்த்தா முதலாவது குருமஹா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் புகழுடல் சமாதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Share This