ரெட்ரோ – விமர்சனம்

கதைக்களம்
தூத்துக்குடியை கலக்கி வரும் பெரிய தாதாவான ஜோஜு ஜார்ஜின் வளர்ப்பு மகன் சூர்யா. முகத்தில் கொஞ்சமும் சிரிப்பே வராமல் எப்போதும் சிடுசிடுவென இருந்து வருகிறார்.
அவர் அப்பா செய்யும் அனைத்து சம்பவங்களுக்கும் உறுதுணையாக இருந்து வரும் சூர்யா, பூஜா ஹெக்டேவை காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் காதலி பூஜா ஹெக்டேவுக்காக, தனது ரவுடியிசத்தை விட்டு திருந்தி வாழ விரும்புகிறார். இதனால் அப்பா ஜோஜு ஜார்ஜுக்கும், மகன் சூர்யாவுக்கும் மோதல் ஏற்படுகிறது.
இந்த மோதலின் போது ஜோஜுவால் கடத்தப்பட்ட தங்க மீன் ஒன்று சூர்யா வசம் சிக்குகிறது. அந்த தங்க மீனை மீட்பதற்காக ஜோஜு ஜார்ஜுக்கும் சூர்யாவுக்கும் கடல் எல்லை தாண்டி கடும் மோதல் உருவாகிறது.
இந்த மோதலில் ஜெயித்தது யார்? சூர்யாவின் மவுனத்துக்கு என்ன காரணம்? சூர்யா எப்படி ஜோஜு ஜார்ஜுக்கு வளர்ப்பு மகனாக மாறினார்? என்பதே படத்தின் மீதிக் கதை.
ரஜினிக்கு ஒரு பேன் பாயாக பேட்ட படத்தை கார்த்திக் சுப்பராஜ் கொடுத்திருந்தார். அதேபோல் சூர்யாவுக்கு மாஸ் ஆக்ஷன் ஹீரோ படமாக இதை இயக்கியிருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் படம் என்றாலே சினிமேட்டிக்காக இருக்கும்.
அதில் கொஞ்சமும் குறை வைக்காமல் இந்த படத்தையும் சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்துள்ளார்.
இருப்பினும் இரண்டாம் பாதியில் ஏற்படும் லேக் மற்றும் படத்தின் நீளம் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் நாம் பார்க்காத சூர்யாவை இதில் காட்டி அசர வைத்துள்ளார்.
சின்ன வயதிலிருந்தே சிரிப்பே வராத இருக்கமான முகத்துடன் தாதாவாக வலம் வரும் சூர்யாவின் நடிப்பு கச்சிதம். ஒவ்வொரு காட்சியிலும் தனது ஈடுபாட்டை முழுமையாக காட்டி நடித்துள்ளார்.
குறிப்பாக முதல் பாதையில் வரும் கல்யாண பாடலான ‘கனிமா’ பாடலுக்கு ஒரே சிங்கிள் ஷாட்டில் பாட்டு, டான்ஸ், பைட் என மாஸ் காட்டி சூர்யா நடித்திருக்கிறார்.
10 நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த காட்சியை தியேட்டரில் ரசிகர்கள் விசில் அடித்துக் கொண்டாடுகின்றனர். சூர்யாவின் நடனமும் ரசிக்க வைக்கிறது. காதலிக்காக திருந்தி வாழும் காட்சிகளிலும், ஜோஜு ஜார்ஜுடன் மோதல் காட்சிகளிலும் சூர்யாவின் நடிப்பு அபாரம்.
ஆக்ஷன் காட்சிகளில் முறுக்கேறிய உடம்புடன் எதிரிகளைப் பந்தாடும் காட்சிகளில் மிரட்டுகிறார். அவருடைய கேரியரில் பெஸ்ட் பைட் சீக்வென்ஸ் படமாக இது இருக்கும்.
பூஜா ஹெக்டே படம் முழுவதும் ட்ராவல் ஆகிறார். சூர்யா அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் அசத்தி இருக்கிறார்.
அவருக்கும் சூர்யாவுக்கும் நடக்கும் மோதல் படத்தின் மாஸ்டர் பீஸ். அரசியல்வாதியாக வரும் பிரகாஷ்ராஜ் நடிப்பு பிரமாதம். இவர்களோடு லாபிங் டாக்டராக வரும் ஜெயராம் நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஒரே ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சரண் நடனமாடி இருக்கிறார்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் கனிமா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் படம் பளிச்சிடுகிறது. அந்தமான் அழகை காட்சிப்படுத்திய விதம் மிக அருமை.
பிளஸ் & மைனஸ்
தாதா வாழ்க்கை, தந்தை மகன் உறவு அதனால் காதலில் ஏற்படும் சிக்கல் என காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
இருப்பினும் இரண்டாம் பாதியில் ஏற்படும் தேக்கம் மற்றும் படத்தின் நீளம் ரசிகர்களின் பொறுமையை கொஞ்சம் சோதிக்கிறது. ஆனாலும் ஆக்ஷன் காட்சிகளும் இசையும் நம்மை ஈர்க்கிறது.
படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். வழக்கமான கார்த்திக் சுப்பராஜ் டெம்ப்லேட் படமாக தான் இதுவும் அமைந்துள்ளது.
சிங்கிள் ஷாட்டில் பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு மேலாக தியேட்டர் வெற்றிக்காக காத்துக் கொண்டு இருக்கும் சூர்யாவுக்கு இந்த படம் பாதை அமைத்துவிடும்.
ரெட்ரோ – முதல் பாதி மெட்ரோ; இரண்டாம் பாதி எலக்ட்ரிக் ட்ரெயின்
நன்றி – தினமலர்.