டூரிஸ்ட் பேமிலி – விமர்சனம்

டூரிஸ்ட் பேமிலி – விமர்சனம்

கதைக்களம்

இலங்கையில் ஏற்பட்ட வறுமை காரணமாக சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கள்ளத்தோணி வழியாக ராமேஸ்வரம் வருகின்றனர்.

அங்கிருந்து கார் மூலம் சென்னையில் இருக்கும் சிம்ரன் சகோதரர் யோகி பாபுவிடம் தஞ்சம் அடைகின்றனர். அவர் உதவியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பக்ஸ் வீட்டில் கேரளாவை சேர்ந்தவர்கள் எனக்கூறி வாடகைக்கு குடியேறுகிறார்கள்.

சில நாட்களிலேயே காலனி பொது மக்களின் குடும்பத்தில் ஒருவராக சசிகுமார் குடும்பம் பழகி அவர்களது மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு சசிகுமார் குடும்பம் தான் காரணம் என போலீஸ் அதிகாரி அவர்களைத் தேடி சென்னை வருகிறார். அதன்பிறகு நடந்தது என்ன? இந்த சதியில் சசிகுமார் குடும்பம் சிக்கியதா அல்லது மீண்டதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

உலகில் பல்வேறு நாடுகளில் ஏற்படும் யுத்தங்கள் மற்றும் பஞ்சங்களில் சிக்கி உயிரை விடுவதை விட, எங்காவது சென்று உயிரோடு வாழலாம் என எண்ணி சொந்த மண்ணை விட்டு, உறவுகளை விட்டு அகதியாக வரும் வருவோரின் மனவேதனையை எமோஷன் கலந்து நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அபிஷன்.

இலங்கையில் இருந்து தமிழகம் வருவோர் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லி இருப்பதுடன் அவர்களிடம் இருக்கும் அன்பையும் மனித நேயத்தையும் இதில் எடுத்துக் காட்டிருக்கிறார் இயக்குனர்.

முதல் படமாக இருந்தாலும் அனுபவ இயக்குனராக காட்சிகளை உணர்வுப் பூர்வமாகவும் அதே நேரம் நகைச்சுவை கலந்தும் ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார்.

படத்தின் மொத்த பாரத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் சசிகுமார். அவருக்கு பக்க பலமாக சிம்ரனும், அவர்களின் மகன்களாக நடித்துள்ள இருவரும் துணை நிற்கின்றனர். இவர்கள் நடிப்பு ஆரம்பம் முதல் இறுதிவரை படத்தை பொழுதுபோக்காக கொண்டு செல்ல உதவி இருக்கிறது.

குறிப்பாக சசிகுமார் பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். இலங்கை பாஷையில் அவர் பேசும் வசனம் ரசிக்க வைக்கிறது. பொறுப்பான குடும்ப தலைவியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் சிறப்பான நடிப்பை சிம்ரன் வெளிப்படுத்தியுள்ளார். வசந்தி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

ஆல்தோட்ட பூபதி நானடா என்ற பாடலுக்கு மேடையில் அவர் ஆடும் டான்ஸ்க்கு ரசிகர்களிடம் தியேட்டரில் செம க்ளாப்ஸ். டீன் ஏஜ் மகனாக நடித்துள்ள மிதுன் ஜெய்சங்கர், தற்போதைய 2கே கிட்ஸ்களின் மனநிலையை பிரதிபலிக்கிறார். இளைய மகனாக நடித்துள்ள கமலேஷ் செய்யும் சேட்டைகள் படத்துக்கு பெரிய பிளஸ். யோகி பாபு வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

படத்திலும் சிம்ரன் பெயரை அவர் உச்சரிக்கும் போது விசில் பறக்கிறது. எம் எஸ் பாஸ்கர், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி, பக்ஸ், யோகலட்சுமி ஆகியோரின் நடிப்பு திரைக்கதைக்கு உதவுகிறது. போலீஸ் ஆக வரும் ரமேஷ் திலக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

படத்திற்கு மற்றொரு பெரிய பலமாக அமைந்திருப்பது ஷான் ரோல்டன் இசை மற்றும் அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு. அழகான கதைக்கு இவர்கள் இருவரின் பங்களிப்பு படத்தை எலிவேட் செய்து காட்டுகிறது.

பிளஸ் & மைனஸ்

அகதிகளாக வரும் மக்களின் மனநிலை மற்றும் அவர்களின் மனிதநேயத்தை சொல்வது தான் இந்த படத்தின் மெயின் ஸ்கோர். சீரியசான விஷயத்தை காமெடியாக சொல்ல நினைத்தது இயக்குனரின் திறமையை காட்டுகிறது.

இலங்கை தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், மனித நேயம், உறவுகளின் முக்கியத்துவம் என கலகலப்பாக கதையை நகர்த்தி இருந்தாலும் முதல் பாதி முழுவதும் ஒரு ஸ்டேட்மென்ட் போலவே தெரிகிறது.

அதோடு குமரவேல் கதையைத் தவிர எங்குமே எமோஷன் கனெக்ட் ஆகவே இல்லை. சில காட்சிகளில் லாஜிக் மீறல்கள் இருப்பது படத்திற்கு பலவீனம்.

டூரிஸ்ட் பேமிலி – ‘தெனாலி’ ராமன் ரிப்பீட்

நன்றி – தினமலர்

Share This