தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது எனவும், நாட்டின் வரலாற்றை மாற்றிய இரண்டு தேர்தல்களில் வெற்றிபெற்றது போன்று உள்ளுராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது இந்த நாட்டின் வரலாற்றை மாற்றிய ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் முடிவுகள் மூலம், அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் உள்ளது எனவும், எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலிலும் நாம் வெற்றிபெறுவோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நாட்டில் 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவிருந்தது எனவும், ஆனால் ரணில் விக்ரசிங்க உள்ளுராட்சிமன்ற தேர்தலை முடக்குவதற்கு பல வேலைகளை செய்தார் எனவும், இறுதியில் நாம் ஆட்சிக்குவந்த பின்னரே தேர்தலை நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை பாதுகாத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாம் மக்களின் பணத்தினை கொள்ளையடிப்பவர்கள் அல்ல எனவும், நாம் மக்களின் பணத்தினை பாதுகாப்பவர்கள் எனவும், ஒரு அரசாங்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றநாள் முதல் ஜனாதிபதி அநுர அவர்கள் அதற்கு முன்னுதாரணமாக உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்த்தரப்பினர் தமது இயலாமையை மறைக்க எம்மை கொள்ளையர்கள் என்று கூறுகிறார்கள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.