அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக இனவாதத்தைப் பரப்பினார்கள் – இனிமேல் நாட்டில் இனவாதம் இல்லை

புதிய சட்டங்களை வகுத்தேனும் நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிங்கள மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். முஸ்லிம் மக்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர்.
பிளவுபட்டிருந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாம் ஒன்றிணைத்துள்ளோம்.
கடந்த காலங்களில் ஆட்சியமைத்தவர்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக இனவாதத்தைப் பரப்பினார்கள். சிங்கள முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்.
இனவாத அமைப்புகளை வலுப்படுத்தினார்கள். அளுத்கமையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. திகனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. தற்போது இவ்வாறான செய்திகளுக்கு இடமில்லை.
எமது நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒருபோதும் இனவாதத்திற்கு இடமளிக்கப்போவதில்லை எனும் உறுதிமொழியை வழங்குகின்றோம்.
இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டம் போதுமானதாக இல்லாத நிலையில், புதிதாகச் சட்டத்தினை வகுத்தேனும் இனவாதத்தைத் தோற்கடிப்போம் என்றார்.