பெனினில் பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் எட்டு வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக அதிகாரிகள் முன்னர் வெளிப்படுத்தியிருந்தனர்.
எனினும் தற்போது அந்த எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
மாலியை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, சமீபத்தில் தனது செயல்பாடுகளை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
வடக்கு பெனினில் கிளர்ச்சியாளர்கள் செயல்படத் தொடங்கியதிலிருந்து இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
வடக்குப் பகுதியில் இரண்டு இராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 வீரர்கள் கொல்லப்பட்டதாக தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.