இந்தியா – பாகிஸ்தான் மோதல் ஆரம்பம்!! எல்லைப் பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சில பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் இராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 22ஆம் திகதி பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன்படி, இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மேலும், இருநாடுகளிலும் உள்ள இந்திய மற்றும் பாகிஸ்தானியர்கள் 14 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் எனவும் அந்நாட்டு அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் சண்டையை ஆரம்பித்தது. எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.