போப் பிரான்ஸிஸின் இறுதி நல்லடக்க நிகழ்வில் பங்கேற்க இத்தாலி சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் திருத்தந்தை பிரான்ஸிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் கலந்து கொள்வதற்காக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று புதன்கிழமை (23) காலை இத்தாலிக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து காலை 09.30 க்கு அபிதாபி சென்று, பின்னர் அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில் இத்தாலிக்கு பயணமாக உள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் குறிப்பிட்டுள்ளது.
காலமான திருத்தந்தை பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி நல்லடக்க நிகழ்வில் கலந்து கொள்ளவும் உலகத் தலைவர்களும் லட்சக்கணக்கான மக்களும் வாட்டிக்கன் நகரில் குவிந்து வருகின்றனர்.
கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது திருத்தந்தையாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் விளங்கிய 88 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ம் திகதி மரணமடைந்தார். திருத்தந்தையின் உடல் ரோம் நகரின் வாடிக்கனில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா கத்தோலிக்க தேவாலயத்தின் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
இறுதி நல்லடக்கம் சனிக்எதிர்வரும் கிழமை (ஏப்ரல் 26) நடைபெறவிருக்கிறது. அவரது உடல் வாடிக்கனில் இருக்கும் அவரது காசா சாண்டா மார்டா, மாளிகையில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.
செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா கத்தோலிக்க தேவாலயத்தில், புதன் கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மூன்று நாள்கள் போப் பிரான்சிஸ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக 25 லட்சம் பொதுமக்கள் வரை வாடிக்கனில் குவிய நேரிடலாம் என அரசின் சார்பில் எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், லெபனான், அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாட்டின் முக்கியத் தலைவர்கள், அதிபர்கள், பாதிரியார்கள், கார்டினல்கள் இந்த அஞ்சலி மற்றும் இறுதி நல்லடக்க நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். இதனால் வாடிக்கன் நகரம் முழுக்க உயர் மட்டப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.