திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் பொய்யை கோலோச்சும் அரசியல் 

திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் பொய்யை கோலோச்சும் அரசியல் 

ஜே.வி.பி அரசாங்கம் மக்களை ஏமாற்றி, தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறி நடந்து வருகிறது. ஒட்டுமொத்த 2.2 மில்லியன் மக்களையும் ஏமாற்றி வருவதை மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர். விவசாயப் பகுதிகளில் அடுத்த போகத்துக்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என்ற போதிலும் உர மானியம் இதுவரை அவர்களுக்கு கிடைக்கவில்லை. பயிர் சேதங்களுக்கு இழப்பீடுகளோ கிடைக்கவில்லை. யானை மனித மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களின் பயிர்கள், உடமைகள் மற்றும் உயிர் சேதங்களுக்கு இன்னும் இந்த அரசாங்கம் தீர்வு காணவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இம்முறை உரங்களின் விலையும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், விவசாயி தூக்கி விடுவோம், விவசாயிகளைப் பாதுகாப்போம், விவசாயியைக் கடவுளாகக் கருதுகிறோம் என்று கூறிய திசைகாட்டி தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினர் ஒட்டுமொத்த விவசாய சமூகத்தினரையும் அழிக்கும் கொள்கையை முன்னெடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் பொலன்னறுவை தேர்தல் தொகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இன்று மக்கள் வாழ முடியாத அளவுக்கு பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளன. பொது மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளன. மூன்று வேளை உணவு கூட சாப்பிட முடியாத நிலையை நாடு எட்டியுள்ளது. அத்தியாவசிய உணவு மற்றும் பாடசாலை பொருட்களுக்கான VAT வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. அரிசி, பால் மா, தேங்காய், உப்பு ஆகியவற்றின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி அவர்கள், திசைகாட்டிக்கு அதிகாரம் கிடைக்காத சபைகளுக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார். பொய், ஏமாற்று அடிப்படையிலான அரசியலுக்கு அதிக ஆயுட்காலம் இல்லை. மின்கட்டணத்தை 33% குறைப்போம் என்று இந்த ஆளும் தரப்பினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறினர். மக்கள் எழுச்சியால் தான் 20% கூட மின்கட்டணம் குறைக்கப்பட்டன.

அரசாங்கம் தீர்மானம் எடுத்து இதனை நிறைவேற்றவில்லை. மக்களின் கருத்துக்களுக்கு ஏற்பே இது குறைக்கப்பட்டது. எஞ்சிய 13% குறைப்பை இந்த அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும். எரிபொருள் விலைகள் தொடர்பில் அரசாங்கம் இவ்வாறான கொள்கைகளை பின்பற்றி வருகிறது. புதிய அரசாங்கத்தில் மக்கள் கண்ட பயன் எதுவும் இல்லை. சுத்த பொய்களை கொண்டு மக்களை ஏமாற்றி வரும் இந்த அரசியலைக் கண்டு மக்கள் ஏமாந்து விடக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Share This