NPP தேர்தல் பிரச்சாரம் ‘வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்’

NPP தேர்தல் பிரச்சாரம் ‘வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்’

வெசாக் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்குகளைப் பெறுவதற்காக, நிதியமைச்சர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பிரச்சார மேடைகளில் மீண்டும் மீண்டும் வெளியிடும் கருத்துகள் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

ஆளும் கட்சி அதிகாரத்தைப் பெறும் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் மத்திய அரசு நிதியளிக்கும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் அரசியல் வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் என கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 17ஆம் திகதி மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்னர் ‘பத்து தடவைகளுக்கு மேல்’ இந்த சிந்தித்தே தீர்மானிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

“முன்மொழிவுகள் பிரதேச சபையிடமிருந்து வர வேண்டும். அந்த முன்மொழிவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் நிதியை ஒதுக்குவதற்கு முன்னர், யார் முன்மொழிவை அனுப்புகிறார்கள் என்பது பார்க்கப்படும். மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் இருந்தால், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு கண்களை மூடிக்கொண்டு அங்கீகரிக்கப்படும். ஆனால் அது மற்றவர்களின் கைகளில் இருந்தால், அவர்களின் முன்மொழிவு 10 தடவைகளுக்கு மேல் பார்க்கப்படும். அவர்களை நம்ப முடியாது”.

ஏப்ரல் 12 ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் தொகுதியில் உள்ள சிலாவத்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாதீட்டில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியை ‘சரியாகப் பயன்படுத்த’ தனது குழுவிற்கு பிராந்திய அதிகாரம் அவசியம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

“இப்போது நாம் கிராமத்தை சுத்தம் செய்ய வேண்டும். கிராமத்தை சுத்தம் செய்து தாருங்கள். பின்னர் பாதீட்டில் இருந்து நாங்கள் ஒதுக்கிய நிதியை உங்களுக்கு பயனளிக்கும் வகையில் வேலை செய்ய பயன்படுத்தலாம்.”

மற்ற கட்சிகளின் பிராந்திய அரசியல் தலைமையை திருடர்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடக்கிற்கு வந்தபோது ஆளும் கட்சி அளித்த நிதி வாக்குறுதியை ‘அச்சுறுத்தல்’ என நாடாளுமன்றத்தில் உள்ள முக்கிய தமிழ் கட்சி கண்டித்துள்ளது.

“இந்த வகையான தேர்தல் பிரச்சாரம் ஒரு அச்சுறுத்தல். பிராந்திய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. எங்களுக்குத் தெரிந்தவரை, இந்த பிராந்தியம் ஒரு தனி மாநிலம் அல்ல,” என இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு ‘அத்தகைய அதிகாரம் இல்லை’

உள்ளூராட்சி நிதியைப் பறிப்பதும் வாக்குகளைப் பலவந்தப்படுத்துவதும் நிறைவேற்று அதிகார உரிமை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி, நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்று முன்னாள் ஆளுநர்கள் ஒரு கூட்டு ஊடக அறிக்கையை வெளியிட்ள்ளனர், அதில் ஒரு உள்ளூராட்சி நிறுவனத்தின் வருவாயை தடுக்க ஜனாதிபதி, அமைச்சரவை அல்லது ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனக் கூறினர்.

“அதாவது, அரசு சாரா அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவால் வெற்றிகொள்ளப்பட்ட மாநகர சபை, நகர சபை அல்லது பிரதேச சபைக்கு நிதியை தடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை.”

“உள்ளூராட்சி சபை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் இருந்தால், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவை கண்களை மூடிக்கொண்டு அங்கீகரிக்கப்படும். ஆனால் அது மற்றவர்களின் கைகளில் இருந்தால், அவர்களின் முன்மொழிவு 10 தடவைகளுக்கு மேல் பார்க்கப்படும்”, என ஜனாதிபதி அல்லது வேறு எவரேனும் கூறுவது முற்றிலும் அரசியல் வற்புறுத்தல் என, மூன்று முன்னாள் ஆளுநர்களான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, அசாத் சாலி மற்றும் ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோர், ஏப்ரல் 17 அன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“மன்னாரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் இரண்டாவது முறையாக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது வாக்கு மோசடி. இது மக்களை தவறாக வழிநடத்துகிறது. இது எந்த அடிப்படையும் இல்லாத அறிவித்தலும் கூட”.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களை சுதந்திரமாக ஆட்சி செய்யும் நிலைமை இருக்க வேண்டும் எனக் கூறும் மூன்று முன்னாள் ஆளுநர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்க்கட்சியில் இருந்தபோது தெளிவாகத் தெரிந்த ஜனநாயக விழுமியங்களை அழிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.

“அரசியலமைப்பு மற்றும் சட்டங்களால் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார். வாக்கு வற்புறுத்தல் நிறைவேற்று அதிகாரம் அல்ல.”

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரச்சாரம் தொடர்பான தேர்தல் சட்டங்களை எவ்வாறு மீறியுள்ளது என்பதையும் மூவரும் தங்கள் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“தேசிய மக்கள் சக்தியால் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில், ‘பிரதேச சபை தற்போதுள்ள அரசாங்கத்திடமிருந்து நிதி கிடைக்கின்றது. பிரதேசத்திற்காக மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்தால், ………..’ எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு அப்பட்டமான பொய். பிரச்சாரம் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறுவதாகும்.”

நாடாளுமன்றத்தில் அதிகாரம் வைத்திருக்கும் குழு உள்ளூராட்சி அரசாங்கத்திலும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு மோசமான அரசியல் நடைமுறை என, மூன்று முன்னாள் ஆளுநர்களும் கருதுகின்றனர், மேலும் இது மக்களின் இறையாண்மையை மீறுவதாகும் என அவர்கள் கூறுகிறார்கள்.

“உள்ளூர் அரசாங்கங்கள் மக்கள் வாக்குகளால் உருவாக்கப்படுகின்றன. அதன் பிரதிநிதிகளுக்கு இருக்கும் அதிகாரம் அமைச்சரவை அமைச்சர்களுக்குக் கூட இல்லை. மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் எந்த நாகரீக ஆட்சியாளரும் நிதிக் கட்டுப்பாடுகளை உருவாக்க முடியாது. உள்ளூராட்சி அரசாங்கம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிக முக்கியமான வசதிகள் வழங்கப்படும் இடமாகும். அது அரசியலிலிருந்து விடுபட்டு மக்களின் நலனுக்காக மாத்திரமே இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அதிகாரம் வகிக்கும் குழு உள்ளூராட்சி மன்ற அரசாங்கத்திலும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு மோசமான அரசியல் நடைமுறை. இது மக்களின் இறையாண்மையை மீறுவதாகும்.”

உள்ளூர் அரசாங்க நிறுவனத்திற்குச் சொந்தமான முத்திரை வ ரி மற்றும் பிற நிதிகள் தடுக்கப்பட்டால், அவ்வாறு செய்யும் அதிகாரிக்கு எதிராக அழைப்பாணை பெற முடியுமென, நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்று முன்னாள் ஆளுநர்களும் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொது நிதி குறித்து தீர்மானம் எடுப்பவராக ஜனாதிபதி வெளியிட்ட கருத்து, ‘வாக்காளர்கள் மீது தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்’ என தேர்தல் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவிக்கின்றது.

“தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படமாடடாது என நேரடியாகக் கூறப்படவில்லை என்றாலும், அது உள்ளூராட்சித் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 82 ஐ மீறுகிறது. தேவையற்ற செல்வாக்கு இருப்பதாகத் தெரிகிறது, அதாவது, வாக்காளரின் சுயாதீனமான தெரிவில் தாக்கம் செலுத்துகிறது” என, சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஜனாதிபதி இதுபோன்ற கருத்துக்களை வெளியிடமாட்டார் என, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share This