டிரம்பின் வரி விதிப்புக்கு பதிலடி கொடுக்க தயாராகிறது சீனா – வர்த்தக அமைச்சர் முக்கிய அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிகளுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை முன்னெடுக்கபோவதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இந்த ஒருதலைப்பட்சமான வரிகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என சீன வர்த்தக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு இல்லையேல் சீனா தனது உரிமைகளை பாதுகாப்பதற்காக உரிய பதில் நடவடிக்கையை எடுக்கும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த இறக்குமதி வரி குறித்து, உலக தலைவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி,
ஜனாதிபதி டிரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக போராடுவோம். எக்கு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல்களுக்கான இறக்குமதி வரி, கோடிக்கணக்கான கனடா மக்களை நேரடியாக பாதிக்கும். இந்த வரி விதிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
வர்த்தகப் போரை எதிர்த்து போராட தயாராகி விட்டோம். நாங்கள் எதையும் சமாளிப்போம் என்று பிரிட்டன் பிரதமர் பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று முதல் புதிய வரிக் கொள்கைகளை அமெரிக்கா கடைப்பிடிக்கும் என டிரம்ப் நேற்று அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி சீனா உட்பட பல நாடுகளுக்கு பாரிய வரி விதிப்புகளை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் இந்த வரிவிதிப்புக்கு எதிர்வினையாற்ற பாதிக்கப்பட்டுள்ள நாடுகளும் தயாராகிவருகின்றன.