இந்திய-சீன எல்லையில் சூழலை மேம்படுத்த முடிவு

இந்திய-சீன எல்லையில் சூழலை மேம்படுத்த முடிவு

இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழலை மேம்படுத்தவும், கிழக்கு லடாக் பகுதியில் மோதலைத் தடுக்க கடந்த அக்டோபா் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை தொடா்ந்து செயல்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்று சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா். எத்தனை சீன வீரா்கள் உயிரிழந்தனா் என்ற சரியான தகவலை அந்நாடு வெளியிடவில்லை.

இந்த மோதலைத் தொடா்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருநாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களை குவித்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் போக்கை அமைதி ஒப்பந்தத்தின் மூலம் சா்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் வீரா்களை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன.

இந்நிலையில், இந்திய-சீன எல்லை விவகாரங்கள் தொடா்பான 32-ஆவது பணி வழிமுறை கூட்டம், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது இருநாட்டு ராணுவத்தினா் இடையே 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தீா்மானிக்கப்பட்டது.

இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழலை மேம்படுத்தவும், கிழக்கு லடாக் பகுதியில் மோதலைத் தீா்க்க கடந்த அக்டோபா் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை தொடா்ந்து செயல்படுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டன. இருதரப்பு எல்லைப் பிரச்னை தொடா்பாக அடுத்த கட்ட சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கு தயாராகுவது குறித்து தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. எல்லைப் பகுதிகளில் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான தூதரக மற்றும் ராணுவ வழிகள் மூலம் அமைதியை பேண இருதரப்பும் ஒப்புக்கொண்டன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This