இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு உள்பட தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையிலை உள்பட தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் இன்று காலைமுதல் நடைபெறும் வருகிறது. உறுதிமொழியோடு தொடங்கிய கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2,100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். கட்சி தொடங்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
பொதுக்குழு கூட்டத்தில், மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும், இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தேவையில்லை, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு , மீனவர்கள் போராட்டத்துக்கு தீர்வு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் உள்பட மொத்த 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளில் நடந்த தவெகவின் கல்வி விருதுகள் வழங்கும் விழாவுக்கு தவெக தலைவர் விஜய் எப்படி முன்பே வருகை தந்ததாரோ அதேபோல், இந்த பொதுக்குழு கூட்டத்துக்கும் காலை 6.30 மணி அளவிலே வருகை தந்து முன்னேற்பாடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து காலை 10 மணியளவில் வழக்கம் போல் வெள்ளை சட்டையுடன் அரங்குக்கு விஜய் வந்தார். அப்போது அரங்கில் கூடியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களை பார்த்து கையசைத்தவாறும், கும்பிட்டவாறும் மேடைக்கு வந்தார். உறுப்பினர்களும் தவெக, தவெக என முழக்கமிட்டு விஜய்க்கு வரவேற்பளித்தனர்.
பொதுக்குழு கூட்டத்துக்கான மேடையில் விஜய்யுடன் உறுப்பினர் சேர்க்கை பிரிவு செயலாளர் விஜயலட்சுமி, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், துணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.