தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் வெளியான அறிக்கை

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் வெளியான அறிக்கை

நாட்டில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக நேற்று முன்தினம் (26) குற்றவியல் முறைப்பாடு ஒன்றும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இரு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகள் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 26ஆம் திகதி பதிவான குற்றவியல் முறைப்பாடு பாணந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் வீடு வீடாகச் சென்று அரிசி, ஆடை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை வாக்காளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்து மேற்படி முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு முறைப்பாடு மொனராகலை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் தொடர்புபட்ட பொலிஸ் பிரிவுகளில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share This