தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் Bill 104க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

கனேடிய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு தொடர்பில், Bill 104 எனப்படும் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வார சட்டமூலத்தை அறிமுகம்செய்த ஒன்றாரியோ மாகாணத்தின் துணை அமைச்சர் விஜய் தணிகாசலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்த வியடம் தொடர்பில் தொடர்ந்தும் பேசியுள்ள விஜய் தணிகாசலம், “இது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெறும் வெற்றியென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அயராது பாடுபட்ட அனைவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 2019ஆம் ஆண்டு இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்ட போது பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கம் இதற்கு எதிராக பல வழக்குகளை தாக்கல் செய்திருந்தது. எனினும், இங்கிருக்கும் அனைத்துக் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி ஏகமனதாக குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்றின.

இந்த சட்ட மூலத்திற்கு எதிராக இரண்டு வழக்குகள் போடப்பட்டிருந்த போதிலும், அவை இரண்டிலும் ஒன்றாரியோ அரசாங்கமும், தமிழ் மக்களும் வெற்றிபெற்றிருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த வழக்கு மூன்றாவது முறையாக கனேடிய உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், இன்று குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது தமிழ் மக்களுக்கு கிடைத்த நீதியாகவே பார்க்கின்றேன்.” என்றார்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மூத்த இராணுவத் தளபதிகள் மூவருக்கு எதிராக பிரித்தானியா இந்த வாரம் தடைகளை விதித்திருந்தது.

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மானுக்கு எதிராகவும் பிரித்தானியா அரசாங்கம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் Bill 104க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share This