இங்கிலாந்து அணியின் தலைவராக விரும்புகிறாரா பென் டக்கெட்?

இங்கிலாந்து அணியின் தலைவராக விரும்புகிறாரா பென் டக்கெட்?

இங்கிலாந்து அணியின் தலைவராக செயல்படுவது குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் கருத்து  வெளியிட்டுள்ளார் .

இங்கிலாந்து அணியின் தலைவராக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியதற்கு பிறகு, அவரது தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். ஜோஸ் பட்லர் தலைவர் பதவியிலிருந்து விலகியதால் இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான அடுத்த தலைவருக்கான தேடலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தலைவர் பொறுப்பு காலியாக இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியை தலைவராக வழிநடத்துவது கண்டிப்பாக எனது கனவாக இருக்கும் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது,

இங்கிலாந்து அணியை தலைவராக வழிநடத்துவது கண்டிப்பாக எனது கனவாக இருக்கும். இங்கிலாந்து அணியின் தலைவர் பொறுப்பினை இலக்காக கொண்டு செயல்படுவதாக நினைக்கவில்லை. ஆனால், தலைவர் பொறுப்புக்கான கேள்விக்கு எதற்காக பதிலளிக்கிறேன் எனத் தெரியவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது, இங்கிலாந்து அணிக்காக ஒரு வீரராக அணியில் விளையாடுவதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவேன் என நினைத்திருக்க மாட்டேன். ஆனால், இன்று இங்கிலாந்து அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறேன். எனது நாட்டுக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக பென் டக்கெட் சிறப்பாக விளையாடினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் 227 ஓட்டங்கள் குவித்து மூன்றாவது இடத்தையும் அவர் பிடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பென் டக்கெட் 165 ஓட்டங்கள் எடுத்ததே சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This