தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு – தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடங்கிய 15 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இன்றுடன் 19 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
2023ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், நேற்று (18) மதியம், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கிழக்கு, ஹோகந்தரவில் உள்ள தேசபந்துவின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, 120 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் பல சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கண்டுபிடிக்கப்படதாக தெரிவிக்னகப்பட்டுள்ளது.
இதன்படி, தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் பணியும் அவற்றைப் பட்டியலிடும் பணியும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, கடந்த மாதம் 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி தொடர்பிலும் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தலைமறைவாகி ஒரு மாதம் ஆகின்றது. இந்நிலையில், தேசபந்து தென்னகோன், இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (18) கூறுகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிப்புமிக்கது என்றும், தேசபந்து தென்னகோனுக்கு அடைக்கலம் அளித்த அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.