இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் – காத்துவீசிய எதிர்க்கட்சி ஆசனங்கள்

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் – காத்துவீசிய எதிர்க்கட்சி ஆசனங்கள்

2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூலதனச் செலவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இடைக்கால கணக்கறிக்கை மீது நேற்று வியாழக்கிழமை மற்றும் இன்று வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றதுடன், இன்று மாலை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் சபையில் இருந்த போதிலும் வாக்கெடுப்பை எவரும் கோரவில்லை என்பதால் இடைக்கால கணக்கறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இடைக்கால கணக்கு அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2600 பில்லியன் ரூபா முதல் நான்கு மாதங்களுக்கு அரச செலவினங்களை மேற்கொள்ள இடைக்கால கணக்கறிக்கையின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கையின் பிரகாரம் முதல் நான்கு மாதங்களுக்கான அரசின் வருவாய் 1600 பில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  அடிப்படை கடன் வரம்பு 1000 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் மீண்டெழும் செலவீனங்களுக்காக 1000 பில்லியன் ரூபாவும், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, வட்டிச் செலுத்தல் மற்றும் இதர கடன் சேவைகளுக்கு 1175 பில்லியன் ரூபாவும், மூலதன செலவுக்காக 425 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்றாலும், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருவதால் காலத்தாமதங்கள் ஏற்பட்டால் அடிப்படை கடன் பெறும் வரம்மை 4000 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கவும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது கருத்துகளை வெளியிட்ட போதிலும் வாக்கெடுப்பு இடம்பெற்ற தருணத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வாவை தவிர ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை. எதிர்க்கட்சியின் பெரும்பாலான ஆசனங்கள் காத்து வீசியவாறே இருந்தன.

ஒருசில புதிய எம்.பிகள் மாத்திரமே எதிர்க்கட்சி பக்கத்தில் அமர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சி இடைக்கால கணக்கறிக்கையை எதிர்க்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகள் எவ்வித அறிவிப்பையும் வெளியிட்டிருக்கவில்லை.

புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களும் இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்படும் தருணத்தில் சபையில் இருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Share This