மியன்மாரின் மியாவடி இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 ஆம் திகதி இன்று இலங்கைக்குத் திருப்ப உள்ளனர்.
2024 பெப்ரவரி 3 அன்று மியன்மாரின் துணைப் பிரதமரும் மத்திய வெளியுறவு அமைச்சருமான யூ தான் ஸ்வேயுடனும், 2025 பெப்ரவரி 13 அன்று தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் மெரிஸ் செங்கியம்போங்ஸாவுடனும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்கள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் உட்பட, இலங்கை மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளை அடுத்து, இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு உரையாடல்களையும் நடத்தி அமைச்சர் விஜித ஹேரத், கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்டு தாயகத்திற்குத் திருப்பி அனுப்புவதற்கு உடனடி, உதவியானது தேவைபடுகின்றது என்பதை வலியுறுத்தினார்.
கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்டு, பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவதில் மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் அளித்த அளப்பரிய உதவிக்கு வெளிவிவகார அமைச்சு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இச்செயன்முறையின் போது வழங்கப்படும் நலன்புரி உதவிகளுக்காக, புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மற்றும் மியன்மாரில் உள்ள பிற சர்வதேச அரசு சாரா அமைப்புகளுக்கும் வெளிவிவகார அமைச்சு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
மியன்மார் மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் தொடர்ச்சியான ஆதரவுடன், தாய்லாந்து மற்றும் மியான்மரில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் இணைந்து மீதமுள்ள கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்டு நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதை உறுதி செய்வதற்காக வெளிவிவகார அமைச்சு முழுமையான ஈடுபாட்டுடன் செயற்படுகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, மனித கடத்தல் திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சு கடுமையாக வலியுறுத்துகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைபிடிக்கவும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் (SLBFE) வேலை வாய்ப்புகளைச் சரிபார்க்கவும் இலங்கையர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.