பங்களாதேஷூடன் செயற்கை துணி உற்பத்தி – முதலீடு செய்ய நாட்டம் காட்டும் இலங்கை

பங்களாதேஷில் கூட்டு முயற்சிகளில், குறிப்பாக இரு நாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்ட செயற்கை துணி உற்பத்தியில் முதலீடு செய்ய இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதாக பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
டாக்கா வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் தலைவர் தஸ்கீன் அஹமட்டை தலைநகரில் உள்ள அந்த சபையின் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம், சுற்றுலா, பெரிய விருந்தகங்கள், தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் மருந்துகள் உள்ளிட்ட கூட்டு முயற்சி முதலீடுகளுக்கான வாய்ப்பு தொடர்பில் தர்மபால வீரக்கொடி விளக்கமளித்துள்ளார்.
பங்களாதேஷூடன் இலங்கையும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளன எனவும், பல ஆண்டுகளாக வலுவான மற்றும் நட்புரீதியான இருதரப்பு இராஜதந்திர உறவைப் பேணி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் உள்ளூர் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இலங்கையின் அனுபவத்தையும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடி பங்களாதேஷ் தொழில்முனைவோரை வலியுறுத்தினார்.
இலங்கை ஏற்கனவே பல நாடுகளுடன் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக பங்களாதேஷூடனான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.