சதொசயில் கடும் வரிசை – அரிசி, தேங்காய்க்கான கேள்வி அதிகரிப்பு
அரை அரச அங்காடியான சதொச கிளைகளில் நேற்று வியாழக்கிழமை முதல் நுகர்வோரின் வரிசைகள் அதிகரித்துள்ளன.
சதொச கிளைகளில் மானிய விலைகளில் நாட்டு அரிசி மற்றும் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதால் இவ்வாறு மக்கள் வரிசைகள் அதிகரித்துள்ளதுடன், கொழும்பு உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதகாலமாக நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், சந்தையில் மக்கள் அதிகம் உண்ணும் நாட்டு அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரிசிக்கான தட்டுப்பாட்டை நீக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும் உடனடி தீர்மானங்களையும் எடுத்துள்ளது.
இதன் பிரகாரம் இந்தியாவிலிருந்து 70ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்தது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் இதுவரை 40ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், சதொச வலையமைப்புப்பின் ஊடாக விநியோகிக்கும் பணியும் ஆரம்பமாகியுள்ளது.
சதொச ஊடாக மானிய விலையில் அரிசி மற்றும் தேங்காய் வழங்கப்படுவதாக சமூகத்தில் பரவியுள்ள செய்தியால் சதொச கிளைகளில் பாரியளவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதுடன், கட்டுப்படத்த முடியாத நிலையும் அதன் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 130 ரூபாவுக்கு தேங்காய்கள் சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை 220 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலையில் சதொச கிளைகளில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளமையை அடுத்தே இவ்வாறு வரிசைகள் அதிகரித்துள்ளன.