பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியர் – நளிந்த ஜயதிஸ்ஸ விசேட உரை

அநுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியரின் அடையாளத்தை பாதுகாத்தமைக்காக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களிலும் ஊடக நெறிமுறை இவ்வாறு கடைபிடிக்கப்படும் என அவர் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அநுராபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சந்தேகநபரை கைது செய்தமை தொடர்பில் இன்று (12) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றி அமைச்சர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“குறித்த சம்பவம் நடந்து 36 மணித்தியாலங்களுக்குள் சந்தேகநபரை கைது செய்ய முடிந்தது. கடந்த கால சம்பவங்களைப் போல நாடகங்கள் இல்லாமல் குறுகிய காலப்பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பெண் வை்த்தியரின் அடையாளத்தை பாதுகாத்தமைக்கு ஊடகங்களுக்கு நன்றி. எதிர்வரும் நாட்களிலும் இந்த ஊடக நெறிமுறை கடைபிடிக்கப்படும் என நம்புகிறோம்.
சுகாதார அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு போன்ற விடயங்களில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இந்த சம்பவத்திற்கு முன்னர் கூட கடந்த கால்ஙகளில் இவ்வாறு வைத்தியசாலை வளாகங்களில், திருடுதல், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவை இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் தொடர்பிலும் நாங்கள் அவதானம் செலுத்த வேண்டும், ஆகவே அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் தொடர்பில் சிந்தித்து பணிப்பகிஷ்கரிப்பை நிறுத்த வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.