சம்பூரில் சூரிய மின்சக்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் மோடி – வெளியானது தகவல்

அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சம்பூரில் நடைபெறும் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்தியத் தலைவர் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி இரண்டு நாள் பயணமாக இலங்கை வரவுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு தனது முதல் அரசுமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்திருந்தார்.
இலங்கை, இந்திய மின் கட்டமைப்புகள் இணைப்பு உட்பட எரிசக்தி இணைப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்கள் கலந்துரையாடியிருந்தனர். அதன் ஆரம்பகட்டமாக சம்பூர் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2002ஆம் ஆண்டு முதல் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் தெடார்பிலான பேச்சுகள் இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்றுவந்ததன் பின்புலத்திலேயே தற்போது அத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
இலங்கை மின்சாரசபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின்உற்பத்தி கூட்டுத்தாபனம் என்பன இணைந்து இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளன. இத்திட்டத்தின் ஊடாக 130 மெகா வோல்ட் மின் உற்பத்தி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.