போரால் பாதிக்கப்பட்ட மியன்மாரில் போதைப்பொருள் பண்ணைகள் பெருக்கம்

போரால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரில் அபின் பண்ணைகள் வேரூன்றி வருகின்றன.
அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலால் தரிசாகக் கிடந்த நாட்டில் போதைப்பொருள் பயிர் மட்டுமே தனக்குள்ள ஒரே வாய்ப்பு என்று விவசாயிகளில் ஒருவரான ஆங் ஹ்லா தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் ஜனநாயக ஆட்சியை ராணுவம் கவிழ்த்தபோது 35 வயதான ஆங் ஹிலா நெல் விவசாயியாக இருந்தார். ஆனால் இன்று அவரது நிலைமை மாறியிருக்கிறது.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு நடந்த சண்டையினால் ஆங் ஹ்லா, மோ பை கிராமத்தில் உள்ள தனது சொந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் மறுபடியும் புதிய வாழ்க்கையைத் தொடங்கியபோது, வழக்கமான பயிர்கள் இனி லாபகரமானவை அல்ல, ஆனால் போதைப் பொருள் செடிகளை பயிரிடுவதால் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இருந்தது என்றார்.
“மக்கள் பணக்காரர்களாக இருப்பதற்காக போதைப் பொருள் செடிகளை வளர்க்கிறார்கள் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை அடைய கடுமையான முயற்சிகளை எடுக்கிறோம்,” என்று ஆங் ஹ்லா கூறியுள்ளார்.
போதைப் பொருள் செடிகளை வளர்த்ததற்காக தான் வருந்துவதாக கூறியஆங் ஹ்லா, வருமானம் மட்டுமே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
என்னுடைய நிலையில் யார் இருந்தாலும் இதையே செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மியன்மார், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மோதல், வறுமை மற்றும் சேதமடைந்த சுற்றுச்சூழலில் சிக்கியுள்ளதாக ஐநா தெரிவிக்கிறது.
அபின் உற்பத்தியில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்ததாக மியன்மார் 2வது இடத்தில் இருந்தது. 2001 செப்டம்பர் 11 நியூயார்க் தாக்குதலையடுத்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான படை நுழைந்தது. அதன் பிறகு அபின் உற்பத்தி அங்கு அமோகமாக இருந்தது. ஆனால் தலிபான் அரசாங்கம் போதைப் பொருள்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தததால் மியன்மார் முதல் இடத்துக்கு வந்துள்ளது.