15 ஆண்டுகளின் பின் முதல்தர கிண்ணம் புளூம்பீல்ட் வசமானது

15 ஆண்டுகளின் பின் முதல்தர கிண்ணம் புளூம்பீல்ட் வசமானது

இலங்கையின் பிரதான கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் மூன்று நாள் தொடரின் இறுதிப் போட்டியில் என்.சி.சி. இற்கு எதிராக முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்ற புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 15 ஆண்டுகளின் பின்னர் முதல் தர சம்பியன் பட்டத்தை வென்றது.

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் (8) முடிவுற்ற போட்டி சமநிலை பெற்றபோதும் புளூம்பீல்ட் அணி போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புளூம்பீல்ட் அணி முதல் இன்னிங்ஸுக்காக 508 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப வீரர் ரொன் சந்திரகுப்தா 237 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த என்.சி.சி. அணி 312 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து. ஆரம்ப வீரர் லஹிரு உதார சதம் (145) பெற்றபோதும் வேறு எவரும் 40 ஓட்டங்களை தாண்டவில்லை. பந்துவீச்சில் ஜெப்ரி வென்டர்சே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ரவிந்து பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 196 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புளூம்பீல்ட் அணி கடைசி நாள் ஆட்ட நேர முடிவில் 78 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களை பெற்றது. முதல் இன்னிங்ஸில் சதத்தை 4 ஓட்டங்களால் தவறவிட்ட அசித்த வன்னிநாயக்க ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களை பெற்றார்.

புளூம்பீல் அணி கடைசியாக 2010–11 முதல்தர கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

Share This