மோடியின் வருகையுடன் ‘ராமேஸ்வரம் – தலைமன்னார் படகு சேவை’ ஆரம்பமாகும்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 5 ஆம் பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இலங்கை வருவார் என்றும் இந்தப் பயணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேலும் பலப்படுத்தும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோடியின் இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கு இடையிலான நில இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணமாக மேற்கொண்டபோது பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன் பிரகாரமே மோடியின் இந்தப் பயணம் இடம்பெற உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான உதவியை இந்தியா செய்திருந்தது.
இந்தியாவின் இந்த உதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதுடில்லியில் வைத்து தமது நன்றியையும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இது பிரதமர் மோடியின் முதல் இலங்கை வருகை அல்ல இது. அவர் இதற்கு முன்பு 2015, 2017, 2019 ஆம் ஆண்டுகளில்இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில், ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கைக்கு வந்த முதல் உலகத் தலைவராக மோடி இருந்ததுடன், இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேசத்துக்கும் எடுத்துரைத்திருந்தார்.
மோடியின் இலங்கைப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நிலத் தொடர்பை ஏற்படுத்தும் திட்டம், திருகோணமலை எண்ணெய் குதங்கள், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்திகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
மோடியின் இந்தப் பயணத்தில் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய படகுப் பாதைத் தொடர்பான திட்டம் இறுதிப்படுத்தப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று திருகோணமலையை இந்தியாவுடன் இணைக்கும் குழாய் இணைப்புத் திட்டம் குறித்தும் ஆழமான கலந்துரையாடல் நடத்தப்பட்டு அடுத்தகட்டத்துக்கு இத்திட்டம் நகர்த்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றப் பின்னர் அரச தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால் இந்தப் பயணத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலமாக இருக்கும் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
மோடியின் இந்தப் பயணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரச தரப்பினர், எதிர்க்கட்சியினர் மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சார்ந்த அரசியல் தலைவர்களுடன் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தயார்ப்படுத்தப்படுவதாகவும் தெரியவருகிறது.
மோடியின் இந்தப் பயணம் குறித்து சீனா தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.