‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ – அநுரவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்

‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ என்ற முழக்கம் கடந்த 1977ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என நாட்டின் சிவில் அமைப்புகளும் ஏனைய தரப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக 1994 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதிகளும் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஆயுதமாகவும் ‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றனர்.
1994 இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதற்காக ஜே.வி.பி உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். இருப்பினும் அவரது 11 ஆண்டு கால ஆட்சியில் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
சந்திரிகாவால் ஜனாதிபதி கதிரைக்கு கொண்டுவரப்பட்ட மஹிந்த ராஜபக்சவும் ‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ என்ற வாக்குறுதியை வழங்கியை போதிலும், அவரது 10 ஆண்டு கால ஆட்சியில் அதனை செய்ய முடியவில்லை என்பதுடன், 18ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக்கொண்டார்.
2015 இல் அமரர் மாதுலுவாவே சோபித தேரர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணியின் பிரதான முழக்கமாக ‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ என்பதே இருந்தது.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாதுலுவாவே சோபித தேரர், நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சியமாக ஒழிக்கப்படும் என கூறினார். ஆனால், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவில்லை. மாறாக அதில் சில அதிகார குறைப்புகள் இடம்பெற்றன.
மைத்திரிபால சிறிசேனவுக்கு பின்னர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் குறைக்கப்பட்ட அதிகாரங்களை 20ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மீண்டும் இணைத்துக்கொண்டார். அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பணியாற்றிய காலப்பகுதியிலும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் இந்த விடயத்தில் நாட்டிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
2024 ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவே வாக்குறுதி அளித்திருந்தார். தெற்கிலும், வடக்கிலும் அநுர இந்த வாக்குறுதியை வழங்கியிரந்தார். இருப்பினும், தற்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்புக்கான எந்த அறிகுறியும் அநுரவின் அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய சில கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன.
2015ஆம் ஆண்டு மாதுலுவாவே சோபித தேரர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணியில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான போராட்டங்களில் அநுரவும் மேடையேறிருந்தார். ஆனால், அதிகாரத்துக்கு வந்தப் பின்னர் அவரும் முன்னாள் ஜனாதிபதிகளை போன்று இந்த விடயத்தில் இதுவரை எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை.
புதிய அரசியலமைப்புக்கான நகர்வுகள் இடம்பெறுவதால் அதில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான கருத்தியலை உருவாக்க பரந்தப்பட்ட மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளன.
அதன் முதல் கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவுக்கு நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான கருத்தியலை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அவர்கள் இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அநுரகுமார திசாநாயக்க, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான எதிர்க்கட்சிகள் செயல்பாடுகளில் கடந்தகாலத்தில் தீவிரமாக இயங்கியவர் என்பதால் இந்தப் பிரச்சாரம் மக்கள் மத்தியில் பிரபல்யமாக அதிகளவான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
கருவை இயக்குவதன் பின்னணியில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே.க இருப்பதாகவும் அதற்காக ஏனைய எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அதன்படி, மீண்டும் ஒருமுறை கருவும் அவரது குழுவினரும், வெள்ளை ஆடை அணிந்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை ஒழிப்பதற்காக கடந்த காலத்தில் அநுர ஏறிய ரயிலில் ஏற முன்வந்துள்ளதாக எதிர்க்கட்சிகளின் வட்டாரத்தில் பேசப்படுகிறது.