நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது – சுகாதார அமைச்சர் கோரிக்கை

நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது – சுகாதார அமைச்சர் கோரிக்கை

பொது மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் விதமான நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (04) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதால் மார்ச் 5 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஊடகங்கள் மூலம் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இக்கருத்தை முன்வைத்திருந்தார்.

தொழிற்சங்கப் போராட்டம் இல்லாமலேயே, இந்த அரசாங்கம் அனைத்து வைத்தியர்களுக்கும் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வை அமுல்படுத்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

அதன்படி, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கு அடிப்படை சம்பளம், விடுமுறை கொடுப்பனவுகள், கூடுதல் நேர கொடுப்பனவுகள் மற்றும் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி விவாதிக்கப்படும் நேரத்தில் இதுபோன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் இதுபோன்ற நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Share This