பார்வையற்றோர் டி20 உலகக்கிண்ணம்: சம்பியன் மகுடம் சூடியது பாகிஸ்தான்

பார்வையற்றோர் டி20 உலகக்கிண்ணம்: சம்பியன் மகுடம் சூடியது பாகிஸ்தான்

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 10 விக்கெட்டுக்களால் வீழ்த்திய பாகிஸ்தான் பார்வையற்றோர் அணி சம்பியன் மகுடத்தினை வெற்றி கொண்டு அசத்தியது.

பாகிஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து நேற்று (3) வரை இடம்பெற்ற நான்காவது பார்வையற்றோருக்கான டி20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் என மொத்தம் 7 அணிகள் பங்கேற்றிருந்தன.

இப்போட்டித் தொடர் பாகிஸ்தானில் இடம்பெற்றிருந்தது. நடப்புச் சம்பியனான இந்திய அணி இத்தொடரில் பங்கேற்றிருந்தமை விஷேட அம்சமாகும்.

மேலும் லீக் முறையில் இடம்பெற்ற இத் தொடரின் முதல் சுற்று முடிவில் முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெற்று, அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பார்வையற்றோர் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக் கொண்டன.

அதற்கமைய நேற்று (3) லாஹுர் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஆரிப் ஹூசைன் 54 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் பாபர் அலி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 140 என்ற இலக்குடன் களம் நுழைந்த பாகிஸ்தான் பார்வையற்றோர் அணிக்கு ஆரம்ப விக்கெட் ஜோடியான நிஸார் அலி அரைச்சதம் கடந்து 72 ஓட்டங்களையும், ஷப்தர் 47 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்து தமக்கிடையில் பிரிக்கப்படாத 140 ஓட்ட இணைப்பாட்டத்தைப் பதிவு செய்ய பாகிஸ்தான் பார்வையற்றோர் அணி 10 விக்கெட்டுக்களால் மிக இலகு வெற்றியைப் பெற்று கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

(அரபாத் பஹர்தீன்)

Share This